Thursday, May 15, 2008

நானே வருவேன்....

அது என்னமோ தெரியல...ப்ளாக் எழுதனும்னு யோசிச்சாலே விரல்ல அடிபடுது. யாரு வெச்ச கண்ணோ... இனிமே கிரிக்கெட் சீஸன்ல ப்ளாக் எழுதறத பத்தி யோசிக்க கூடாது போல... ரெண்டுமே முடியாம போய்டுது...

விரைவில் ... புது பொலிவுடன் ...மீண்டும் வருவேன்...உங்கள் அபிமான வலை திரைகளில் முன் பதிவு செய்து கொள்ளவும்.

சந்திக்கும் வரை வணக்கத்துடன்...விடை பெறுகிறேன்.

Friday, August 04, 2006

இந்திய விஜயம் - 6

நயாகராவிலிருந்து கிளம்பி (அரட்டை அடித்துவிட்டு) வீட்டுக்கு திரும்பும் போது மணி நள்ளிரவு ஒன்று. சரி எல்லோரும் தூங்கியிருப்பார்கள் என் நினைத்து டூ வீலரை தெரு முனையிலேயே ஆஃப் செய்துவிட்டு அப்படியே சத்தமில்லாமல் அதன் இயல்பான வேகத்தில் வீட்டுக்கு அருகில் சென்றால் வீடு முழுவதும் "நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நார்வே" நாடு போல எல்லா லைட்டும் போட்டு ஜெகஜ்ஜோதியாக இருந்தது. என்னடா...காலையில் ஏதாவது விஷேஷமா என யோசித்துப்பார்த்தால் அப்படி எதுவும் இருக்கிறமாதிரி நினைவில் இல்லை. வாசலில் என் அக்காவும் மனைவியும் உள்ளே என் அம்மா & அண்ணி. வண்டியை ஸ்டாண்டிட்டுவிட்டு என் அக்காவிடம் விசாரித்தேன், அம்மணியிடம் மறைமுக முறைப்பு இருந்ததால்.

Motor-ல் தண்ணி வரவில்லை. Over Head Tank-ம் காலி. காலைக்கடன்களுக்கு கூட தண்ணி இல்லாததால் தெரு முனையில் உள்ள அடி பம்ப்பில் தண்ணீர் பிடிக்க தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். என் அண்ணணுக்கு night duty (Police) என்பதால் ஒத்தை ஆண் நான் சரியான நேரத்தில் மாட்டிக்கொண்டேன். என்ன செய்ய, ஒரு 100 குடம் அடித்து, அடித்ததெல்லாம் (நயாகராவில்) இறங்கி முகம் ஒளியுடன் பிரகாசிக்கும் அளவுக்கு தெளிவாகி விட்டேன்.


அதன் பின் படுக்கையில் போய் படுத்தது தான் தெரியும், தண்ணியடிச்ச அலுப்பில் (அதான் பம்ப்புங்க..) காலை ஒரு 9 மணியளவில் என் பொண்ணு (என்) வாயில் சாதம் ஊட்டுகிற பாவனையில் (அசதியில் வாய் சற்று திறந்திருந்தது போலும்) ஏதோ ஒரு குப்பையை தூக்கி போட்டதில் அரண்டு போய் (ஏதோ பூச்சி என நினைத்து) எழுந்தேன். காலை வேலைகளை முடித்துவிட்டு Bore motor மாட்டிய கம்பெனிக்கு போன் செய்து complaint register பண்ணிணேன். ஒரு 3 மணி நேரத்தில் ஆள் அனுப்புவதாக சொன்னார்கள். சரி அதுவரை என்ன பண்ணலாம் என யோசித்தேன்.


வீட்டின் முன்பக்க தெருவில் பக்கத்து வீட்டு வாண்டுகள் ஐந்தாருபேர் "தெரு கிரிக்கெட்" ஆடிக் கொண்டிருந்தார்கள். சரி கொஞ்ச நேரம் விளையாடலாம் என நினைத்து பசங்களிடம் கேட்டேன். ரொம்ப யோசனைக்கு பிறகு சரி என்றார்கள். ஒருவனை என் தலைமையில் ஒதுக்கி விட்டு மீதி பேர் எதிர் அணியானார்கள். டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்து 10 ஓவரில் 132 ரன்கள் எடுத்தோம். ..(ஐயா...செஞ்சுரி). அவர்கள் 47 எடுத்தார்கள். இப்படி நேரம் ஓடியது. (பக்கத்தாத்து தாவணிகள் ஜன்னல் வழியே நோட்டம் விட்டதை நான் நோட்டம் விட்டது வேற விஷயம்) என் பெரிய அண்ணா பொண்ணு வந்து "சித்தப்பா...மோட்டார் ரிப்பேர் பண்ண ஆள் வந்திருக்கு" என்று சொன்னதும்...பசங்களிடம்..அப்புறம் திரும்பி விளையாடலாம் என சொல்லி வீட்டுக்கு வந்தேன். சர்வீஸ் ஆளிடம் என்ன நடந்த்து என்பதை சொல்லி, பின் அவன் ஏதேதோ முயற்சி செய்து, அது பலனில்லாமல் போகவே "ஸார் உள்ள இருக்கிற பைப்ப எடுத்துதான் பார்க்கணும்" என்றான். சரி என்று அவனுக்கு உதவிக்கும் ஆள் தேவைப்பட்டதால் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 225 அடி நீளத்திற்க்கு உள்ளிருந்த பைப்பை வெளியே எடுத்து முடிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விட்டது. கீழ் முனையில் மண் அடைத்து கொண்டிருந்ததால் தண்ணீர் வரவில்லை. அடைப்பை சரி செய்து மீண்டும் 225 அடியை உள்ளிறக்கி (நல்ல வேளை PVC பைப் என்பதால் கனம் கம்மியாக இருந்த்தது) எல்லாம் மூடி டெஸ்ட் பண்ணி முடிப்பதற்க்குள் 2 மணி ஆகி விட்டது. அவனை settle செய்து அனுப்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடிந்ததும் தூங்கப்போன என்னை குழந்தைக்கு bottle food குடுக்க தங்கமணி சொல்ல, எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி (அந்த முணுமுணுப்பை காதில் வாங்காமல்) தூங்க ஆயத்தமாகும் பொழுது வாசலில் "அண்ணே...அண்ணே" என்று குரல். நான் யாரென்று பார்க்க எத்தனிக்க, அதற்க்குள் அம்மணி கதவைத் திறந்து என்னவென்று கேட்டாள். (அந்த கிரிக்கெட் வாண்டுகள் தான்...) தங்கமணியிடம் "மாமி (தங்கமணி என் வீட்டில் இருக்கும் சமயங்களில் புடவைதான்), அண்ணா (நான் ஷார்ட்ஸ்) இருக்காளா ? அப்புறம் கிரிக்கெட் விளையாட வரேண்ணு சொன்னா..அதான் கூப்பிட வந்தோம்.."

அவ்வளவுதான் தங்கமணியை மாமின்னு சொன்னதை விட என்னை அண்ணான்னு சொன்னது தான் பயங்கற உசுப்பேத்தி விட்டது போல..."யாருடா...அண்ணா...அதெல்லாம் வரமாட்டா.. நீங்க தெரு ஓரமா போய் ஆடுங்கோ.. ஆத்துக்குள்ள பந்து வந்ததுன்னா தெரியும் சேதி..." ன்னு அவர்களை விரட்டி விட்டு திரும்பவும், என்ன நடக்கிறதென்று பின்னால் பார்க்க வந்த நான் நின்று கொண்டிருந்தேன். என்னை பாத்ததுதான் தாமதம்... முகவாயை தோளில் இடித்து விட்டு இன்னும் நேத்திக்கு பொறந்ததோடலாம் ஆடக்கூடாது... எப்பவும் உங்க லெவல்லயே இருக்க மாட்டேளா (சிலேடையில் முந்தின நாள் பார்ட்டியையும் குத்திக் காட்டி ஒரு சின்ன அர்ச்சனை செய்து விட்டு) "தூங்கப்போறேன்னு சொன்னேளே ...ஒன்னு தூங்கப்போங்கோ...இல்லை குழந்தைக்கு bottle food குடுங்கோன்னு சொல்லி உள்ளே போய்விட்டாள். பசங்களிடம் நாளை வருவதாக சைகை காட்டி விட்டு ...உள்ளே சென்றேன்.

Friday, June 09, 2006

என் இனிய ப்ளாக் நெஞ்சங்களே

வந்துட்டான்யா...வந்துட்டான்யா. "வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்".. என்னவோ ப்ளாக் எழுதி வருடக் கணக்கில் ஆனமாதிரி ஒரு உள்ளுணர்வு.. என் குரு டுபுக்கு அவர்கள் கூட கமென்ட்டில் வந்து "Time Out" குடுத்து Warn பண்ணக்கூடிய அளவுக்கு இடைவெளி விழுந்து விட்டது. மன்னிக்கவும்.

நல்லா இருக்கீங்களா ?

நான், துணைவி, ஜேஷ்ட குமாரி மற்றும் அனைவரும் நலம். அடிபட்ட விரல் சரியாகி இப்போது கிரிக்கட்டில் அடித்துக்கொண்டு இருக்கிறேன். வாரம் மூன்று நாள் கிரிக்கெட் பயிற்சியில் ...வார இறுதி மேட்ச்சில் என்று காலம், நேரம் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. சரி வழக்கம் போல் வேலை நேரத்தில் ப்ளாக் எழுதி விடலாம் என்றால் புதிய web assignment வேறு எனக்கு குடுத்து அனுமன் தோளில் இராமரும், இலக்குவனும் உட்கார்ந்து இருந்த மாதிரி டீம் லீடரும், மேனேஜரும் என் தோளுக்கு பின்னால் நின்று மென்னியை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் டீமை இரண்டாக பிரித்து என்னை 20 ஓவர் டீமிற்க்கு "vice captain" என்று பொறுப்பு வேறு. லீக் மேட்ச் வேறு ஆரம்பித்து விட்டது. எல்லா தமிழ் படங்களும் வேறு பார்க்காமல் டிஸ்க்-கில் தூங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதம் எப்படி சென்றது என்று யோசித்தால் இந்த மாதமும் ஓடி விடும். சரி போய் நாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை முதலில் ப்ளாக்கில் தெரிவிக்கலாம் என்று நினைத்து தான் இதை எழுத வந்தேன்.

கூடிய விரைவில் அடுத்த இந்திய விஜயத்தில் (அதாங்க ...ப்ளாக்ல) சந்திக்கலாம் என்று கூறி நன்றியுடன் தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Thursday, May 04, 2006

பட்ட கையிலே படும்...(புது மொழி..?)

கல்யாணம் பண்ணிப்பார்....(இது மணமக்களோட பெற்றோருக்கா இல்லை மணமக்களுக்கா?)வீட்டை கட்டிப்பார் என்பதுடன் வேறு வீடு மாறிப்பார் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம் போல.

சற்றேரக்குறைய 5 வருடம் ஒரே அபார்ட்மென்ட்டில் இருந்தேன். குடிவரும் போது பேச்சிலர். பின் ஆறு மாதத்தில் திருமணம். பின் 2½ வருடம் கழித்து குழந்தை...இப்போது குழந்தைக்கு 1¾ வயது. இந்த 5 வருடத்தில் வீட்டில் Marital Status-க்கு ஏற்ப சாமான்களின் பெருக்கம். இடம் பத்தாது போல் தோன்றவே சற்று பெரிய அபார்ட்மென்ட் பார்த்து போகலாம் என தீர்மானித்து, ஒரு 3 வாரங்கள் அலைந்து ஒரு அபார்ட்மென்ட்டை பார்த்து அடவான்ஸ் குடுத்து விட்டு சென்ற வாரம் சனி அன்று ஒரு 17அடி ட்ரக்கை வாடகைக்கு எடுத்து ஆறேழு நண்பர்கள் உதவியுடன் மாறுதல் இனிதே முடிவடைந்தது.

அப்பப்பா... எத்தனை குப்பை சாமான்கள். நிறைய உபயோகபடுத்தி தற்போது உபயோகத்தில் இல்லாத பாத்திரங்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள்...அனைத்து பிராண்ட் க்ளீனிங் ஐட்டங்கள்...மாயிஸ்ச்சரைஸிங் க்ரீம்கள்..

"இதெல்லாம் நீ இப்போதைக்கு உபயோகப்படுத்தி நான் பார்த்ததே இல்லை... தூக்கி குப்பைல போடேன். வெட்டியா இடத்தை அடைச்சுண்டிருக்கு.." - அம்மணியிடம் சொன்னேன்.

"சரி...அப்ப கொஞ்ச மாசமா உபயோகத்தில இல்லாததலாம்...தூர போட்ருவா ?" - அம்மணி.

பேச்சில் பொடி இருப்பதை சற்று உணர்ந்தேன். இல்ல, தூர போட வேண்டாம் அப்படி ஓரமா வெச்சு வை...பார்த்துட்டு போடலாம். சொல்லி விட்டு ட்ரக் லோடிங்-கை தொடர்ந்தேன்...ஃபுல் ஆனதும்...புது அபார்ட்மென்ட்டில் (நான் மற்றும் நண்பர்கள் மட்டும் சென்று) இறக்கி விட்டு...ஃபைனல் சில்லறை க்ளீயரிங்க்குக்காக...வந்தேன்.

"அந்த மூலைல நீஙக சொன்னமாதிரி கொஞ்ச மாசமா யூஸ் பண்ணாததெல்லாம் வெச்சிருக்கேன்..பாத்து கழிச்சு கட்டுங்கோ"

நான் முதலில் சொன்ன item-கள் போக..புது கம்ப்யூட்டர் புக்ஸ், சில என் டி-ஷர்ட்டுகள், டிஜிடல் கேமரா, வீடியோ கேமரா..." அதற்கு மேல் பார்க்க பொறுக்காமல்...

"இங்க வா என்ன இதெல்லாம்..வெச்சிருக்க..." - நான்

"ஆமா...புக்ஸ் வாங்கினதோட சரி...அதுல இன்டெக்ஸ் பேஜ் கூட நீங்க பாக்கலை..." ஒரு 7 மாசமா யூஸ் பண்ணாம இருக்கு,"

"சரி கேமராலாம் இங்க ஏன் வந்திருக்கு ?"

"ஊர்ல வெச்சு கொஞ்சம் படம் காமிச்சதோட சரி..ஒரு அஞ்சு மாசமா யூஸ் பண்ணாமதான் இருக்கு ?"

நான் சொன்னது என்னிடமே பூமராங் போல திரும்பி வந்தது. என்ன சொல்ல?.. சரி சரி எல்லாத்தையும் எடுத்துண்டு கெளம்பு..ஒண்ணும் தூர போட வேண்டாம். நிறைய வேலை இருக்கு...இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தேன்.

சில்லறை பொருள்களுக்காகவே காரில் மேலும் இரண்டு shifting முடிந்தது.

இன்னிக்குள்ள ஓரளவு arrange பண்ணிருவோம். நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. 14 member லிஸ்ட்ல இருந்த்தா போகணும்..

இப்பதான கை சரியாகியிருக்கு...உடனே போணுமா ?

ஆபிஸ் ட்ரெய்னிங்னால டீம்ல ரெண்டு மூனு பேர் வரலை...ஸோ...மே பி 14 லிஸ்ட்ல என்ன செலக்ட் பண்ணினா போகணும்.


ஒன்றும் சொல்லவில்லை..

முதல்ல பெட்ரூம்&பாத்ரூம் item-கள் செட் பண்ணிரலாம். மீதிய அப்பப்ப கேப்ல arrange பண்ணிருலாம்...

பெரிய கிங் சைஸ் பெட்டை செட் பண்ண அதோட பேஸை ரெடி செய்தேன். மேட்ரஸை தூக்கி பேஸ் மேல வைக்கணும். அது என்னை விட அரை அடி உயரம்(ஆறரை அடி). ஒரு வசமான கார்னர் பகுதியை பிடித்து தூக்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். இரைந்து கிடந்த விளையாட்டு toys உருளையில் (என் பெண்ணின் உபயம்) காலை வைக்க...அது உருண்டு மூவ் ஆக...பேலன்ஸ் இழந்தேன்.. மேட்ரஸ் flexible என்பதால்...என் பிடியில் இல்லாத இன்னொரு கார்னர் எதிர் திசையை நோக்கி வளைந்து என்னையும் பிடித்து இழுத்து தள்ளியது. கை விரல்கள் மேட்ரஸுடன் சுவற்றில் உள்ள ஜன்னல் விளிம்பில் மோதி..பிடி நழுவி.. போறாததற்கு... மேட்ரஸ் வேறு எந்த பக்கம் விழலாம் என்று டான்ஸ் ஆடி மீண்டும் வெய்ட்டாக வந்து கையில் சுவற்றுடன் மோதியது.

திக்கி திணறி செட் பண்ணிவிட்டு..வலி + அலுப்புடன் தூங்க சென்றேன்.

அடுத்த நாள் காலை...

"என்னங்க விளையாட போலையா ?"

"இல்ல...14 லிஸ்ட் தேறிருச்சாம்...(சமாளித்தேன்)"

"சரி...குழந்தைய பாத்துக்கோங்கோ..இந்த ஃப்ரூட் ஸ்மாஷை குடுங்கோ..நான் பல் தேய்ச்சுட்டு வந்துடறேன்..."

என்ன சொல்லி என்னைச் சொல்ல....

பட்ட கையிலே படும்..

Wednesday, April 19, 2006

நீ கெட்டு நான் கெட்டு கிரிகெட்டு

டுபுக்கு ஸார்...உங்க தலைப்பு கொஞ்சம் பொருந்தி வந்ததுனால யூஸ் பண்ணிகிட்டேன். காப்பிரைட் இஷ்ஸூஸ் பத்தி ஃபீல் பண்ணிணீங்கன்னா... நீஙக வீட்டுக்கு வரும்போது "ராயல் டீ" தரேன் (நல்ல ஏலக்காய் & இஞ்சி போட்டு).

இந்த பதிவு அக்ரஹாரத்து கிரிக்கெட்டினால் இல்லை...ஆங்காரத்து கிரிக்கெட்டினால்.

இங்கு மிஷிகனில் எங்ளுக்கு கிரிக்கெட் டீம் உள்ளது. சென்ற வருடம் தான் அதை முறைப்படுத்தி பதிவு செய்தோம். City of Pontiac மேயர் ஒரு பார்க் க்ரவுண்டை எங்களுக்கு தானமாக தந்துள்ளார். அதில் காங்க்ரீட் போட்டு மேலே Asro Turf போட்டு போன வருட கோடை முடிவில் ரெடி செய்தோம். பின் குளிர் ஆரம்பித்து விட்டதால் (குளிர் காலத்தில் சாதாரணமாக மைனஸ் 17 டிகிரி செல்ஸியஸ்லாம் இருக்கும்) கிரவுண்ட் பக்கம் போகவில்லை. வின்ட்டரில் ஒரு இன்டோர் டோர்னமென்ட் ஆடி (டீம் பார்ம் பண்ணி முதல் டோர்னமென்ட்) செமி ஃபைனல் வரை சென்றோம்.

இப்போ ஸம்மர் ஆரம்பித்து விட்டதால் ஓப்பன் டோர்னமென்ட் அடுத்த மாதம் உள்ளது. மனைவியின் எச்சரிக்கை (வயசாச்சு...இதெல்லாம் வேண்டாம்)யையும் மீறி ரெகுலர் ப்ராக்டீஸ்-க்கு போய்க்கொண்டிருந்தேன். நேற்று அப்படி விளையாடிக் கொண்டிருந்தோம்.

நான் எல்லாவற்றிலும் ஆவரேஜ் தான். ரெகுலர் விக்கெட் கீப்பர் பாட்டிங் பிராக்டீஸ் செய்யும் போது தற்காலிகமாக என்னை கீப் பண்ண சொன்னார்கள். நானும் நன்றாக தான் பண்ணிக்கொண்டிருந்தேன். எங்க டீமில் ஒரு வடக்கத்தி பெளலர் இருக்கான். கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி. முதல் பந்தை சற்று லெக் சைடில் ஓவர் பிட்சாக போட்டதில் பந்து பெளன்டரிக்கு பறந்தது. எல்லோரும் ஒரே டீம், ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அடித்த பேட்ஸ்மேன் அவனிடம் "You should not bowl down the leg side..that too over pitched" என்று அட்வைஸ் வேறு செய்தார். நம்மாளுக்கு அதில் கொஞ்சம் ஆங்காரம் வந்து விட்டது போல. அடுத்த பால் நல்ல full shoulder பவரில் ஷார்ட் பிட்ச் பெளன்ஸர் போட்டான். பாட்ஸ்மேன் அடிக்க போய் கனெக்ட் பண்ணமுடியாமல் கடைசி செகன்ட்டில் விலக...அடுத்த சில மைக்ரோ வினாடிகளில், பால் என் முகத்தின் சமீபத்தில். சட்டென்று சுதாரித்து கைகளால் முழுவதுமாக கேதர் செய்வதற்கு முன்னால் கைகளை மூடி விட்டேன். என் வலது கை மோதிர விரலின் நுனியில் பட்டு ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் விழுந்தது. ப்ராணண் போயே போச்...வீட்டுக்கு வருவதற்குள் விரல் பேல்ஸ் போல ஆகி விட்டது.

இரவு வீட்டில் இட்லி என்பதால் மீதி விரலை வைத்து அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு விட்டேன். காலை ஆபீஸ் வந்து மானேஜரிடம் விபரம் கூறி (கொஞ்சம் மெதுவாதான் வேலை பாக்க முடியும்...) அவர் பாக்கும் போதெல்லாம் பட்டன் பட்டனாக தட்டினேன் (இல்லாட்டாலும் கட்டிங் & ஒட்டிங் தான் முக்கால் வாசி). மதியம் வழக்கம் போல லஞ்சிற்கு வீட்டுக்கு போனேன். சாதம் பிசைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் அம்மணியை அழைத்தேன்.

"அதான் எல்லாம் அடுப்பு மேல வெச்சிருக்கேனே...எடுத்து போட்டுக்கோங்கோ..." - உள்ளேயிருந்து குரல்.

"இல்ல இங்க வந்து கொஞ்சம் பிசிஞ்சு குடேன்" - நான்

"ஏன் கை என்னாச்சு..?"

காண்பித்தேன்.

சரியா விளையாட தெரியலைன்னா ஏன் விளையாடனும். அதான் வயசாச்சு வேண்டாம்னு சொல்றேனே...கேட்டாதான... அர்ச்சனை(யுடன்) தட்டை (பிசைந்து) குடுத்தாள். மீதி விரல்களால் எடுத்து சாப்பிட கஷ்டமாக இருந்தது...என் மனைவியை பார்த்தேன்...ஊட்டிலாம் விட முடியாது...வேற வேலை இல்லை என சொல்லி கண்ணிலிருந்து மறைந்தாள் (குழந்தைய பாத்துக்காம என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு, வீட்ல கல்யாணத்துக்கு போட்ட மோதிரம் பத்தி வேற கமென்ட் விட்டேளே(?) அதுக்குதான் பகவானா பாத்து குடுத்திருக்கார்... உள்ளிருந்து அசரீரி கேட்டது). விரல் வீங்கி சற்று உள்நோக்கிய திசையில் பெர்மனென்ட்டாக வளைந்து இருந்ததால்...என் ஒன்னறை வயது பெண் வேறு நான் அவளை கைப்பிடித்து நடத்தி கூட்டி போவதாக நினைத்து விரலைப் பற்றி ரண வலியை..கூட்டியது. சாதாரணமான நம்க்கே இந்த விரல் வலியினால இவ்ளோ பிரச்சினைன்னா... சினிமால விரல்லயே விளையாடும் சிம்புவுக்கு பட்டுதுன்னா ?

இதனால் ப்ளாக்-கிற்கு வருகை தரும் கோடானு கோடி அன்பர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் (ஊர்ல எலெக்ஷன் இல்லா..அதாம்லே இந்த எஃபக்ட்), நீஙக கிரிக்கெட் விளையாடாதீங்கன்னு நான் சொல்லப்போறேன்னு நீங்க நினைச்சா அதுதான் இல்ல. அடுத்த போஸ்ட்டுக்கு கொஞ்ச நாளாகும்னு சொல்ல வந்தேன்...(இல்லாட்டாலும் என்னத்த கிழிச்சன்னு நீங்க சொல்றது...கேக்குது).

ஆபீஸ் வொர்க் மாதிரி கட்டிங் ஒட்ட்டிங்ல ப்ளாக் ஒப்பேத்த முடியாது. எல்லாம் சொந்த சரக்கு...டைப் பண்ணியே ஆகணுங்கிறதுனால...தான் இந்த வேண்டுகோள் (இந்த தலைப்ப கூட டைப்தான் பண்ணிணேனே ஒழிய ...டுபுக்கு போஸ்ட்-லேர்ந்து காப்பி & பேஸ்ட் பண்ணலீங்கோ).

Wednesday, April 12, 2006

இந்திய விஜயம் - 5

என் வீட்டிலிருந்து நயாகரா போய்சேர 20நிமிடம் பிடித்தது. பார்க்கிங் ஏரியாவில் வண்டியை பார்க் செய்து விட்டு மாடி ஏறி போனோம். செக்யூரிட்டியின் சல்யூட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஆர்யாஸ் சமீபத்தில் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. நான் 2 அல்லது 3 வருடத்திற்க்கு முன் பார்த்த ஆர்யாஸ் பாரை விட இது கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

அரைஇருட்டு. (இலவச கொத்ஸ்) கலர்கலரா பல்ப்லாம் எரியல...இருந்த பல்பும் P.C. ஸ்ரீராம் லெவல்ல தான் எரிந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய LCD(Projection?) டிவி வைத்து...அதில் தமிழ் குத்து பாட்டு விசிடி ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். பாட்ட ரஸிக்கறவங்களுக்கு எடுபடாத ஒரு லெவல்ல வால்யூம் காதை அடைத்தது. நிறைய இளவட்டங்கள் (போன ப்ளாக்லயே சொன்னேனே. .. நிறைய பேர் ஏதாவது வேலையில் இருக்கிறார்கள் என்று), கல்லூரி மாணவர்கள். பெண்கள் வரும் அளவுக்கு இன்னும் நெல்லை கலாச்சாரம் முன்னேறவில்லை.

நான் முடிந்த மட்டும் நண்பர்கள் பெயரை தவிர்த்தே இனி சம்பவங்களை சொல்கிறேன். ஆறு பேருக்கு தோதான இடத்தில் உட்கார்ந்தோம். வழக்கமாக இரண்டு பெருக்கு இடையில் தான் வாக்குவாதம் / வாய்ச்சண்டைகள் வரும் (முதல்லயே ஆர்யாஸா நயாகராவானு பேசிக்கிட்டாங்களே ..அவங்கதான்). மீண்டும் ஆரம்பித்தார்கள்.

டேய்...இஙக டாய்லெட் எங்க இருக்குன்னு இப்பவே கேட்டு வெச்சிக்க...உனக்கு ஒரு மடக்கு பீர் அடிச்சாலே (நண்பன் பீர் மட்டும் தான் குடிப்பான்) ஒரு பாட்டில் ஒன்னுக்கு இருக்கனும். கடைசி நிமிஷத்தில் தேடிட்டு அடக்கமுடியாம பாரை நாசம் பண்ணிராத.

போல...நான் பரவாயில்ல... ஒன்னமாரி குடிச்சுட்டு வாந்தி எடுக்கதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல

ஏலேய் உங்க எழவ..இன்னூரு நாள் வெச்சிக்கோங்களேம்ல.. (சண்டை முற்றி பார்ட்டி கேன்ஸல் ஆகி விடக்கூடாதே என்ற கவலையில் இன்னொருவன்).

சிறிது அடங்கினார்கள். வெய்ட்டர் வந்தார். ஆர்டர் எடுத்தார். நான் Sandpiper பீர் (இந்தியா செல்வதற்க்கு முன்னமே இந்த பிராண்ட் பற்றிய தகவல் வந்தது) சொன்னேன் (நண்பர்களுடன் சேர்ந்தால் மட்டும் நான் பீர் அல்லது வைன் குடிப்பதுண்டு. குரு டுபுக்கு அவர்களே..பின்னூட்டத்தில் "வீட்டு அம்மணிக்கு தெரியுமாவே" அப்படின்னு கேட்டு மிரட்ட வேண்டாம். என்னைப் பற்றி அ...ஆ எல்லாம் அம்மணிக்கு மட்டுமல்லாது, எங்க மற்றும் அவங்க வீட்டிலும் எல்லாருக்கும் தெரியும் நான் எல்லாவற்றிலும் அளவு என்பதால் எதையும் மறைத்ததில்லை).

பீர் நண்பன் "புல்லட்" ஆர்டர் செய்தான். "உன் உடம்புக்கு(நண்பர் மிகவும் ஒல்லி) சைக்கிளே ஜாஸ்தி...இதுல புல்லட் வேற... எழவு இந்த புல்லட் பீர எப்பிடிதான் குடிக்கானோ...அதுக்கு பேசாம சாக்கடை தண்ணிய குடிக்கலாம்". சண்டை பார்ட்டி மீண்டும் ஆரம்பித்தான்.

இவன் பதில் பேச எத்தனிப்பதற்குள் முதலில் சண்டையை தற்காலிகமாக அமைதிப்ப்டுத்தியவன்... எய்யா... தயவுசெஞ்சு.. கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இருங்க..மனுஷன் நிம்மதியா ஆர்டர் பண்ணிக்கறேன்.

ஆர்டர் முடிந்தது.

நான் க்ரெடிட் கார்டு Accept பண்ணுவார்களா என்று வெய்ட்டரிடம் கேட்டேன். Accept பண்ணிப்போம் சார்...3% surcharge உண்டு என்றான். நான் அது பரவாயில்லை என சொல்லி ஆர்டரை சீக்கிரம் கொண்டு வரும்படி சொன்னேன். வெய்ட்டர் மறைந்தார்.

நான் க்ரெடிட் கார்டு 3% எக்ஸ்ட்ராக்கு ஓ.கே சொன்னதும் பேச்சு என் பக்கம் திரும்பியது. மக்கா உனக்கு மாசத்துக்கு என்ன ஒரு 1 லட்ஷம் சம்பளம் இருக்குமா? (இவனிடம் ரொம்பவும் பொய் சொல்ல முடியாது...இவன் சொந்தகாரன் என்னைத்தெரிந்த இரண்டு பேர் யூ.எஸ்-ல் இருக்கிறார்கள்)

"டாக்ஸ் எல்லாம் போக ஒரு ஒன்னே கால் வரும்".- நான்.

ஏ...யப்பா ..பரவாயில்லியேல..(நான் பார்ட்டி கொடுப்பது என்னுடைய தலையாய கடமைகளில் ஒன்று போல நினைத்தான்)

பின் நான் வீட்டு வாடகை, மாத செலவு, கார் இன்ஷுரன்ஸ், பெட்ரோல், ஹெல்த் இன்ஷுரன்ஸ் எல்லாம் விவரித்தேன். அப்படி இருந்தும் எனக்கு என்னவோ அநாவசியமாக நிறைய சம்பளம் கொடுப்பதாகதான் அவர்கள் நினைப்பதாக தெரிந்தது.

இப்போ பேச்சு திரும்பியது.
மாப்ள...வெள்ளைக்காரிலாம் எப்படி அங்க..?
எப்படின்னா...எப்படி? - நான் கேட்டேன்.
இல்ல..யாரையாவது கிஸ்லாம் பண்ணிருக்கியா? எங்க ஊர் தரத்துக்கு வரும் ஜேம்ஸ்பாண்ட் மற்றும் Sex & Aids ரீதியிலான இதர ஆங்கில மருத்துவ படங்களில் வருபவளை போலத் தான் (பார்த்ததும் ஒரு 2 செகன்ட் பேச்சு ...பின் கிஸ்) எல்லா வெள்ளைக்காரிகளும் என நினைப்பு . கிட்டதட்ட "உயரான் ஒருமிக்கான்" லெவல் படங்கள்..

எனக்கு இதை எப்படி அவர்களுக்கு விளக்க என புரியவில்லை. பின் ரத்னசுருக்கமாக "அதெல்லாம் வெள்ளைக்காரி வெள்ளைக்காரன் கூட மட்டுந்தான் அப்படி இருப்பா" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆர்டர் பண்ணிய சரக்கு(கள்) வந்தது. நயாகரா Choose பண்ணியவன் சொன்னதை போலவே ஏராளமான நொறுக்கு தீவனங்களும் வந்தன. தீவனத்துடன் பழைய நினைவுகளையும் அசைபோட்டோம் (80களில் ஒன்றாக இருந்த பேச்சிலர் லைஃபிலிருந்து முன்னேறி கல்யாண வாழ்க்கை வரை வந்து நின்றது. அதை தனி போஸ்ட்-ல சொல்லி இன்னும் பத்து தலைப்பு ஓட்டுவோம்ல...).

சண்டைபார்ட்டி இருவரில் ஒருவன் ஏதும் தொடவில்லை (குடிப்பதை விட்டாச்சாம்). அவன் கல்யாணத்து முந்தின நாள் வரைக்கும் "குடி சூப்பர் 10"-ல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவன். வாந்தியே எடுத்து வயிறு ஒண்டிபோயி காய்ஞ்சாலும் பரவாயில்லை ..எல்லோரையும் விட ஒரு துளி மட்டா குடித்தாலும் உயிர்நீக்கும் மான இனத்தை சேர்ந்தவன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. விசாரித்ததில் மனைவியின் கடாட்ஷம் (கல்யாணம் ஆகி ஒரு வருடம் இருக்கும்) பின்னனியில் இருந்தது தெரியவந்தது.

இப்ப பீர் பார்ட்டி ..திருந்திய பார்ட்டியை பார்த்து...என்னல இப்படி சொட்டு கூட குடிக்காம ராமசந்திரன இன்ஸல்ட்(?) பண்ற. அவ்ளோ தூரத்துலேர்ந்து நமக்காக (தண்ணியடிக்க?) வந்திருக்கான்.. கொஞ்சமாவது சாப்டு...அவனுக்கு சந்தோஷமா இருக்கும்ல...அதற்கு இவன் "எவம்ல இவன்...சொன்னா புரிஞ்சுக்க...வீட்ல நெலம சரியில்லனா விடேன்...உனக்கு என்ன ரெண்டு ஈனு ஈத்திட்ட (எங்க ஊர் வழக்கப்படி மாடு கன்னுக்குட்டி போட்டால் கன்று ஈனிருக்கு என சொல்வார்கள்...இங்க பீர் பார்ட்டிக்கு ரெண்டு ஆண் பிள்ளைகள்)...உன்னலாம் வீட்ல தண்ணீதொளிச்சு விட்டாச்சு...எங்களுக்கு அப்படியா..இனிமே தான் எல்லாம் இருக்கு..வன்ட்டான் பாரு...எழவுக்கு கம்பெனி சேக்க".

பீர் பார்ட்டி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

நேரம் கடந்தது...அங்கேயே சாப்பாடும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தாகி விட்டது. மணி பதினொன்னரை. சரி வீட்டுக்கு கிளம்பலாம் என ஏகமனதாக முடிவெடுத்து...பில்லை செட்டில் செய்வதற்காக வெய்ட்டரிடம் சைகை செய்தேன். பில்லுடன் வ்ந்தார். டிப்ஸ் எல்லாம் சேர்த்து எழுதி கார்டில் செலுத்திவிட்டு கிளம்பினோம். நண்பன் எவ்ளோ ஆச்சு என (information sake) கேட்டான். பின் இன்னோருநாளும் இப்படி வரவேண்டும் என சொன்னான்.

"எதுக்குல அவனுக்கு (எனக்கு) செலவு வைக்க...அதான் இன்னிக்கி வந்தாச்சுல்லா.." - பீர் பார்ட்டி.

அதற்கு மீண்டும் நேயர்விருப்பம் கேட்ட நண்பர் "அவன் குடுக்கப்போற டாலர்-ல இதுலாம் கொசு மாதிரி..(முதல்ல சம்பளம்..இதர விபரங்கள் சொன்னதின் பலன்) ...இதே மாதிரி 10 தடவ கூட வரலாம்...

யப்பா...இதுக்கு ஒரிஜினல் நயாகராவே போறது cheap என நினைத்து... இடத்தை காலி செய்தேன்(தோம்).

Friday, April 07, 2006

காற்றினிலே வார்த்தைகளால்

வெள்ளி என்றாலே வெள்ளைக்காரர்களுக்கு உற்சாகம் தான், சனி & ஞாயிறு விடுமுறை என்பதால்.

என் ஆபிஸுக்கும் வீட்டுக்கும் 12 நிமிடம்தான் காரில் செல்ல ஆகும் என்பதால் நான் லஞ்சிற்க்கு 99.99% வீட்டுக்குதான் போவேன். Infact நான் பார்க்கிங் பகுதிக்கு நடக்கும் நேரத்தை விட அங்கிருந்து வீட்டுக்கு காரில் செல்லும் நேரம் குறைவு.

இன்று அப்படி போய்க்கொண்டிருந்த போது வழியில் ஒரு கார் இடது இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்யாமல் பின்னால் வருபவர்களை குழப்பும் விதமாக நேராக சென்று கொண்டிருந்த்து. அந்நியன் படம் வேறு ஏற்கனவே ரசித்து பார்த்திருந்ததால் சின்ன அலட்சியம் மெகா அலட்சியமாகி விடக்கூடாதென்பதற்காக, சரி இதை அவளிடம் சொல்லலாம் என் நினைத்து என் காரை கொஞ்சம் விரட்டி இணையான வலது பக்க லேனில் சென்று நம்ம ஊர் பாணியில் கை விரல்களை குவித்து விரித்து காண்பித்து இன்டிகேட் பண்ணினேன். அது புரியாமல் அந்த வெள்ளைக்காரி (ஒரு 25 வயசு இருக்கும்) திருப்பி என்னவென கேட்டாள். "உன் கார் இன்ட்டிகேட்டர் அணைக்கவில்லை" என்பதை (கார் & காற்று சத்தத்தில் பேசினால் கேட்காது) விரலால் அவளை(காரை) சுட்டிக்காட்டி மீண்டும் அதே சமிக்ஞை செய்தேன். வந்தது வினை. அதை அவள் அனர்த்தமாக புரிந்து கொண்டு எனக்கு நடு விரலை காண்பித்தாள். எனக்கா மகா டென்ஷன் ஆகி விட்டது. உடனே என் கட்டைவிரலை (மட்டும்) உயர்த்தி காண்பித்தேன் (டீல்). அவள் முகம் இப்போது சுருங்கி விட்டது. சரியாக என் வீட்டு திருப்பம் (சின்ன ரோடு) வந்தது. நான் திரும்பி என் வீட்டை நோக்கி சென்று காரை நிப்பாட்டி விட்டு இறங்கவும் அவளும் என் பின்னால் வந்து காரை ஆஃப் செய்யாமல் பார்க் மட்டும் பண்ணி என்னிடம் வந்து சற்று கோபத்துடன் கேட்டாள். பொறுமையாக அவளுக்கு விளக்கினேன். பின் புரிந்தவளாய் அவள் செயலுக்கு மன்னிப்பு கேட்டாள். நானும் அதெல்லாம் தப்பாக நினைக்கவில்லை என சொன்னேன். நான் அந்த ஏரியாவில் தான் இருக்கிறேனா என்றும் கேட்டாள். பின் நன்றி சொல்லி விட்டு (இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்து) வண்டியில் கிளம்பி போனாள்.

ஏரியாவை வேறு கேட்டுவிட்டு போயிருக்கிறாள். இனிமேல் தான் தெரியும் வீட்டுக்கு ஆட்டோ வருமா அல்லது லிமோஸின் வருமா என்று....