Friday, August 04, 2006

இந்திய விஜயம் - 6

நயாகராவிலிருந்து கிளம்பி (அரட்டை அடித்துவிட்டு) வீட்டுக்கு திரும்பும் போது மணி நள்ளிரவு ஒன்று. சரி எல்லோரும் தூங்கியிருப்பார்கள் என் நினைத்து டூ வீலரை தெரு முனையிலேயே ஆஃப் செய்துவிட்டு அப்படியே சத்தமில்லாமல் அதன் இயல்பான வேகத்தில் வீட்டுக்கு அருகில் சென்றால் வீடு முழுவதும் "நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நார்வே" நாடு போல எல்லா லைட்டும் போட்டு ஜெகஜ்ஜோதியாக இருந்தது. என்னடா...காலையில் ஏதாவது விஷேஷமா என யோசித்துப்பார்த்தால் அப்படி எதுவும் இருக்கிறமாதிரி நினைவில் இல்லை. வாசலில் என் அக்காவும் மனைவியும் உள்ளே என் அம்மா & அண்ணி. வண்டியை ஸ்டாண்டிட்டுவிட்டு என் அக்காவிடம் விசாரித்தேன், அம்மணியிடம் மறைமுக முறைப்பு இருந்ததால்.

Motor-ல் தண்ணி வரவில்லை. Over Head Tank-ம் காலி. காலைக்கடன்களுக்கு கூட தண்ணி இல்லாததால் தெரு முனையில் உள்ள அடி பம்ப்பில் தண்ணீர் பிடிக்க தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். என் அண்ணணுக்கு night duty (Police) என்பதால் ஒத்தை ஆண் நான் சரியான நேரத்தில் மாட்டிக்கொண்டேன். என்ன செய்ய, ஒரு 100 குடம் அடித்து, அடித்ததெல்லாம் (நயாகராவில்) இறங்கி முகம் ஒளியுடன் பிரகாசிக்கும் அளவுக்கு தெளிவாகி விட்டேன்.


அதன் பின் படுக்கையில் போய் படுத்தது தான் தெரியும், தண்ணியடிச்ச அலுப்பில் (அதான் பம்ப்புங்க..) காலை ஒரு 9 மணியளவில் என் பொண்ணு (என்) வாயில் சாதம் ஊட்டுகிற பாவனையில் (அசதியில் வாய் சற்று திறந்திருந்தது போலும்) ஏதோ ஒரு குப்பையை தூக்கி போட்டதில் அரண்டு போய் (ஏதோ பூச்சி என நினைத்து) எழுந்தேன். காலை வேலைகளை முடித்துவிட்டு Bore motor மாட்டிய கம்பெனிக்கு போன் செய்து complaint register பண்ணிணேன். ஒரு 3 மணி நேரத்தில் ஆள் அனுப்புவதாக சொன்னார்கள். சரி அதுவரை என்ன பண்ணலாம் என யோசித்தேன்.


வீட்டின் முன்பக்க தெருவில் பக்கத்து வீட்டு வாண்டுகள் ஐந்தாருபேர் "தெரு கிரிக்கெட்" ஆடிக் கொண்டிருந்தார்கள். சரி கொஞ்ச நேரம் விளையாடலாம் என நினைத்து பசங்களிடம் கேட்டேன். ரொம்ப யோசனைக்கு பிறகு சரி என்றார்கள். ஒருவனை என் தலைமையில் ஒதுக்கி விட்டு மீதி பேர் எதிர் அணியானார்கள். டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்து 10 ஓவரில் 132 ரன்கள் எடுத்தோம். ..(ஐயா...செஞ்சுரி). அவர்கள் 47 எடுத்தார்கள். இப்படி நேரம் ஓடியது. (பக்கத்தாத்து தாவணிகள் ஜன்னல் வழியே நோட்டம் விட்டதை நான் நோட்டம் விட்டது வேற விஷயம்) என் பெரிய அண்ணா பொண்ணு வந்து "சித்தப்பா...மோட்டார் ரிப்பேர் பண்ண ஆள் வந்திருக்கு" என்று சொன்னதும்...பசங்களிடம்..அப்புறம் திரும்பி விளையாடலாம் என சொல்லி வீட்டுக்கு வந்தேன். சர்வீஸ் ஆளிடம் என்ன நடந்த்து என்பதை சொல்லி, பின் அவன் ஏதேதோ முயற்சி செய்து, அது பலனில்லாமல் போகவே "ஸார் உள்ள இருக்கிற பைப்ப எடுத்துதான் பார்க்கணும்" என்றான். சரி என்று அவனுக்கு உதவிக்கும் ஆள் தேவைப்பட்டதால் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 225 அடி நீளத்திற்க்கு உள்ளிருந்த பைப்பை வெளியே எடுத்து முடிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விட்டது. கீழ் முனையில் மண் அடைத்து கொண்டிருந்ததால் தண்ணீர் வரவில்லை. அடைப்பை சரி செய்து மீண்டும் 225 அடியை உள்ளிறக்கி (நல்ல வேளை PVC பைப் என்பதால் கனம் கம்மியாக இருந்த்தது) எல்லாம் மூடி டெஸ்ட் பண்ணி முடிப்பதற்க்குள் 2 மணி ஆகி விட்டது. அவனை settle செய்து அனுப்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடிந்ததும் தூங்கப்போன என்னை குழந்தைக்கு bottle food குடுக்க தங்கமணி சொல்ல, எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி (அந்த முணுமுணுப்பை காதில் வாங்காமல்) தூங்க ஆயத்தமாகும் பொழுது வாசலில் "அண்ணே...அண்ணே" என்று குரல். நான் யாரென்று பார்க்க எத்தனிக்க, அதற்க்குள் அம்மணி கதவைத் திறந்து என்னவென்று கேட்டாள். (அந்த கிரிக்கெட் வாண்டுகள் தான்...) தங்கமணியிடம் "மாமி (தங்கமணி என் வீட்டில் இருக்கும் சமயங்களில் புடவைதான்), அண்ணா (நான் ஷார்ட்ஸ்) இருக்காளா ? அப்புறம் கிரிக்கெட் விளையாட வரேண்ணு சொன்னா..அதான் கூப்பிட வந்தோம்.."

அவ்வளவுதான் தங்கமணியை மாமின்னு சொன்னதை விட என்னை அண்ணான்னு சொன்னது தான் பயங்கற உசுப்பேத்தி விட்டது போல..."யாருடா...அண்ணா...அதெல்லாம் வரமாட்டா.. நீங்க தெரு ஓரமா போய் ஆடுங்கோ.. ஆத்துக்குள்ள பந்து வந்ததுன்னா தெரியும் சேதி..." ன்னு அவர்களை விரட்டி விட்டு திரும்பவும், என்ன நடக்கிறதென்று பின்னால் பார்க்க வந்த நான் நின்று கொண்டிருந்தேன். என்னை பாத்ததுதான் தாமதம்... முகவாயை தோளில் இடித்து விட்டு இன்னும் நேத்திக்கு பொறந்ததோடலாம் ஆடக்கூடாது... எப்பவும் உங்க லெவல்லயே இருக்க மாட்டேளா (சிலேடையில் முந்தின நாள் பார்ட்டியையும் குத்திக் காட்டி ஒரு சின்ன அர்ச்சனை செய்து விட்டு) "தூங்கப்போறேன்னு சொன்னேளே ...ஒன்னு தூங்கப்போங்கோ...இல்லை குழந்தைக்கு bottle food குடுங்கோன்னு சொல்லி உள்ளே போய்விட்டாள். பசங்களிடம் நாளை வருவதாக சைகை காட்டி விட்டு ...உள்ளே சென்றேன்.