Wednesday, April 19, 2006

நீ கெட்டு நான் கெட்டு கிரிகெட்டு

டுபுக்கு ஸார்...உங்க தலைப்பு கொஞ்சம் பொருந்தி வந்ததுனால யூஸ் பண்ணிகிட்டேன். காப்பிரைட் இஷ்ஸூஸ் பத்தி ஃபீல் பண்ணிணீங்கன்னா... நீஙக வீட்டுக்கு வரும்போது "ராயல் டீ" தரேன் (நல்ல ஏலக்காய் & இஞ்சி போட்டு).

இந்த பதிவு அக்ரஹாரத்து கிரிக்கெட்டினால் இல்லை...ஆங்காரத்து கிரிக்கெட்டினால்.

இங்கு மிஷிகனில் எங்ளுக்கு கிரிக்கெட் டீம் உள்ளது. சென்ற வருடம் தான் அதை முறைப்படுத்தி பதிவு செய்தோம். City of Pontiac மேயர் ஒரு பார்க் க்ரவுண்டை எங்களுக்கு தானமாக தந்துள்ளார். அதில் காங்க்ரீட் போட்டு மேலே Asro Turf போட்டு போன வருட கோடை முடிவில் ரெடி செய்தோம். பின் குளிர் ஆரம்பித்து விட்டதால் (குளிர் காலத்தில் சாதாரணமாக மைனஸ் 17 டிகிரி செல்ஸியஸ்லாம் இருக்கும்) கிரவுண்ட் பக்கம் போகவில்லை. வின்ட்டரில் ஒரு இன்டோர் டோர்னமென்ட் ஆடி (டீம் பார்ம் பண்ணி முதல் டோர்னமென்ட்) செமி ஃபைனல் வரை சென்றோம்.

இப்போ ஸம்மர் ஆரம்பித்து விட்டதால் ஓப்பன் டோர்னமென்ட் அடுத்த மாதம் உள்ளது. மனைவியின் எச்சரிக்கை (வயசாச்சு...இதெல்லாம் வேண்டாம்)யையும் மீறி ரெகுலர் ப்ராக்டீஸ்-க்கு போய்க்கொண்டிருந்தேன். நேற்று அப்படி விளையாடிக் கொண்டிருந்தோம்.

நான் எல்லாவற்றிலும் ஆவரேஜ் தான். ரெகுலர் விக்கெட் கீப்பர் பாட்டிங் பிராக்டீஸ் செய்யும் போது தற்காலிகமாக என்னை கீப் பண்ண சொன்னார்கள். நானும் நன்றாக தான் பண்ணிக்கொண்டிருந்தேன். எங்க டீமில் ஒரு வடக்கத்தி பெளலர் இருக்கான். கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி. முதல் பந்தை சற்று லெக் சைடில் ஓவர் பிட்சாக போட்டதில் பந்து பெளன்டரிக்கு பறந்தது. எல்லோரும் ஒரே டீம், ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அடித்த பேட்ஸ்மேன் அவனிடம் "You should not bowl down the leg side..that too over pitched" என்று அட்வைஸ் வேறு செய்தார். நம்மாளுக்கு அதில் கொஞ்சம் ஆங்காரம் வந்து விட்டது போல. அடுத்த பால் நல்ல full shoulder பவரில் ஷார்ட் பிட்ச் பெளன்ஸர் போட்டான். பாட்ஸ்மேன் அடிக்க போய் கனெக்ட் பண்ணமுடியாமல் கடைசி செகன்ட்டில் விலக...அடுத்த சில மைக்ரோ வினாடிகளில், பால் என் முகத்தின் சமீபத்தில். சட்டென்று சுதாரித்து கைகளால் முழுவதுமாக கேதர் செய்வதற்கு முன்னால் கைகளை மூடி விட்டேன். என் வலது கை மோதிர விரலின் நுனியில் பட்டு ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் விழுந்தது. ப்ராணண் போயே போச்...வீட்டுக்கு வருவதற்குள் விரல் பேல்ஸ் போல ஆகி விட்டது.

இரவு வீட்டில் இட்லி என்பதால் மீதி விரலை வைத்து அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு விட்டேன். காலை ஆபீஸ் வந்து மானேஜரிடம் விபரம் கூறி (கொஞ்சம் மெதுவாதான் வேலை பாக்க முடியும்...) அவர் பாக்கும் போதெல்லாம் பட்டன் பட்டனாக தட்டினேன் (இல்லாட்டாலும் கட்டிங் & ஒட்டிங் தான் முக்கால் வாசி). மதியம் வழக்கம் போல லஞ்சிற்கு வீட்டுக்கு போனேன். சாதம் பிசைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் அம்மணியை அழைத்தேன்.

"அதான் எல்லாம் அடுப்பு மேல வெச்சிருக்கேனே...எடுத்து போட்டுக்கோங்கோ..." - உள்ளேயிருந்து குரல்.

"இல்ல இங்க வந்து கொஞ்சம் பிசிஞ்சு குடேன்" - நான்

"ஏன் கை என்னாச்சு..?"

காண்பித்தேன்.

சரியா விளையாட தெரியலைன்னா ஏன் விளையாடனும். அதான் வயசாச்சு வேண்டாம்னு சொல்றேனே...கேட்டாதான... அர்ச்சனை(யுடன்) தட்டை (பிசைந்து) குடுத்தாள். மீதி விரல்களால் எடுத்து சாப்பிட கஷ்டமாக இருந்தது...என் மனைவியை பார்த்தேன்...ஊட்டிலாம் விட முடியாது...வேற வேலை இல்லை என சொல்லி கண்ணிலிருந்து மறைந்தாள் (குழந்தைய பாத்துக்காம என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு, வீட்ல கல்யாணத்துக்கு போட்ட மோதிரம் பத்தி வேற கமென்ட் விட்டேளே(?) அதுக்குதான் பகவானா பாத்து குடுத்திருக்கார்... உள்ளிருந்து அசரீரி கேட்டது). விரல் வீங்கி சற்று உள்நோக்கிய திசையில் பெர்மனென்ட்டாக வளைந்து இருந்ததால்...என் ஒன்னறை வயது பெண் வேறு நான் அவளை கைப்பிடித்து நடத்தி கூட்டி போவதாக நினைத்து விரலைப் பற்றி ரண வலியை..கூட்டியது. சாதாரணமான நம்க்கே இந்த விரல் வலியினால இவ்ளோ பிரச்சினைன்னா... சினிமால விரல்லயே விளையாடும் சிம்புவுக்கு பட்டுதுன்னா ?

இதனால் ப்ளாக்-கிற்கு வருகை தரும் கோடானு கோடி அன்பர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் (ஊர்ல எலெக்ஷன் இல்லா..அதாம்லே இந்த எஃபக்ட்), நீஙக கிரிக்கெட் விளையாடாதீங்கன்னு நான் சொல்லப்போறேன்னு நீங்க நினைச்சா அதுதான் இல்ல. அடுத்த போஸ்ட்டுக்கு கொஞ்ச நாளாகும்னு சொல்ல வந்தேன்...(இல்லாட்டாலும் என்னத்த கிழிச்சன்னு நீங்க சொல்றது...கேக்குது).

ஆபீஸ் வொர்க் மாதிரி கட்டிங் ஒட்ட்டிங்ல ப்ளாக் ஒப்பேத்த முடியாது. எல்லாம் சொந்த சரக்கு...டைப் பண்ணியே ஆகணுங்கிறதுனால...தான் இந்த வேண்டுகோள் (இந்த தலைப்ப கூட டைப்தான் பண்ணிணேனே ஒழிய ...டுபுக்கு போஸ்ட்-லேர்ந்து காப்பி & பேஸ்ட் பண்ணலீங்கோ).

Wednesday, April 12, 2006

இந்திய விஜயம் - 5

என் வீட்டிலிருந்து நயாகரா போய்சேர 20நிமிடம் பிடித்தது. பார்க்கிங் ஏரியாவில் வண்டியை பார்க் செய்து விட்டு மாடி ஏறி போனோம். செக்யூரிட்டியின் சல்யூட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஆர்யாஸ் சமீபத்தில் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. நான் 2 அல்லது 3 வருடத்திற்க்கு முன் பார்த்த ஆர்யாஸ் பாரை விட இது கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

அரைஇருட்டு. (இலவச கொத்ஸ்) கலர்கலரா பல்ப்லாம் எரியல...இருந்த பல்பும் P.C. ஸ்ரீராம் லெவல்ல தான் எரிந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய LCD(Projection?) டிவி வைத்து...அதில் தமிழ் குத்து பாட்டு விசிடி ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். பாட்ட ரஸிக்கறவங்களுக்கு எடுபடாத ஒரு லெவல்ல வால்யூம் காதை அடைத்தது. நிறைய இளவட்டங்கள் (போன ப்ளாக்லயே சொன்னேனே. .. நிறைய பேர் ஏதாவது வேலையில் இருக்கிறார்கள் என்று), கல்லூரி மாணவர்கள். பெண்கள் வரும் அளவுக்கு இன்னும் நெல்லை கலாச்சாரம் முன்னேறவில்லை.

நான் முடிந்த மட்டும் நண்பர்கள் பெயரை தவிர்த்தே இனி சம்பவங்களை சொல்கிறேன். ஆறு பேருக்கு தோதான இடத்தில் உட்கார்ந்தோம். வழக்கமாக இரண்டு பெருக்கு இடையில் தான் வாக்குவாதம் / வாய்ச்சண்டைகள் வரும் (முதல்லயே ஆர்யாஸா நயாகராவானு பேசிக்கிட்டாங்களே ..அவங்கதான்). மீண்டும் ஆரம்பித்தார்கள்.

டேய்...இஙக டாய்லெட் எங்க இருக்குன்னு இப்பவே கேட்டு வெச்சிக்க...உனக்கு ஒரு மடக்கு பீர் அடிச்சாலே (நண்பன் பீர் மட்டும் தான் குடிப்பான்) ஒரு பாட்டில் ஒன்னுக்கு இருக்கனும். கடைசி நிமிஷத்தில் தேடிட்டு அடக்கமுடியாம பாரை நாசம் பண்ணிராத.

போல...நான் பரவாயில்ல... ஒன்னமாரி குடிச்சுட்டு வாந்தி எடுக்கதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல

ஏலேய் உங்க எழவ..இன்னூரு நாள் வெச்சிக்கோங்களேம்ல.. (சண்டை முற்றி பார்ட்டி கேன்ஸல் ஆகி விடக்கூடாதே என்ற கவலையில் இன்னொருவன்).

சிறிது அடங்கினார்கள். வெய்ட்டர் வந்தார். ஆர்டர் எடுத்தார். நான் Sandpiper பீர் (இந்தியா செல்வதற்க்கு முன்னமே இந்த பிராண்ட் பற்றிய தகவல் வந்தது) சொன்னேன் (நண்பர்களுடன் சேர்ந்தால் மட்டும் நான் பீர் அல்லது வைன் குடிப்பதுண்டு. குரு டுபுக்கு அவர்களே..பின்னூட்டத்தில் "வீட்டு அம்மணிக்கு தெரியுமாவே" அப்படின்னு கேட்டு மிரட்ட வேண்டாம். என்னைப் பற்றி அ...ஆ எல்லாம் அம்மணிக்கு மட்டுமல்லாது, எங்க மற்றும் அவங்க வீட்டிலும் எல்லாருக்கும் தெரியும் நான் எல்லாவற்றிலும் அளவு என்பதால் எதையும் மறைத்ததில்லை).

பீர் நண்பன் "புல்லட்" ஆர்டர் செய்தான். "உன் உடம்புக்கு(நண்பர் மிகவும் ஒல்லி) சைக்கிளே ஜாஸ்தி...இதுல புல்லட் வேற... எழவு இந்த புல்லட் பீர எப்பிடிதான் குடிக்கானோ...அதுக்கு பேசாம சாக்கடை தண்ணிய குடிக்கலாம்". சண்டை பார்ட்டி மீண்டும் ஆரம்பித்தான்.

இவன் பதில் பேச எத்தனிப்பதற்குள் முதலில் சண்டையை தற்காலிகமாக அமைதிப்ப்டுத்தியவன்... எய்யா... தயவுசெஞ்சு.. கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இருங்க..மனுஷன் நிம்மதியா ஆர்டர் பண்ணிக்கறேன்.

ஆர்டர் முடிந்தது.

நான் க்ரெடிட் கார்டு Accept பண்ணுவார்களா என்று வெய்ட்டரிடம் கேட்டேன். Accept பண்ணிப்போம் சார்...3% surcharge உண்டு என்றான். நான் அது பரவாயில்லை என சொல்லி ஆர்டரை சீக்கிரம் கொண்டு வரும்படி சொன்னேன். வெய்ட்டர் மறைந்தார்.

நான் க்ரெடிட் கார்டு 3% எக்ஸ்ட்ராக்கு ஓ.கே சொன்னதும் பேச்சு என் பக்கம் திரும்பியது. மக்கா உனக்கு மாசத்துக்கு என்ன ஒரு 1 லட்ஷம் சம்பளம் இருக்குமா? (இவனிடம் ரொம்பவும் பொய் சொல்ல முடியாது...இவன் சொந்தகாரன் என்னைத்தெரிந்த இரண்டு பேர் யூ.எஸ்-ல் இருக்கிறார்கள்)

"டாக்ஸ் எல்லாம் போக ஒரு ஒன்னே கால் வரும்".- நான்.

ஏ...யப்பா ..பரவாயில்லியேல..(நான் பார்ட்டி கொடுப்பது என்னுடைய தலையாய கடமைகளில் ஒன்று போல நினைத்தான்)

பின் நான் வீட்டு வாடகை, மாத செலவு, கார் இன்ஷுரன்ஸ், பெட்ரோல், ஹெல்த் இன்ஷுரன்ஸ் எல்லாம் விவரித்தேன். அப்படி இருந்தும் எனக்கு என்னவோ அநாவசியமாக நிறைய சம்பளம் கொடுப்பதாகதான் அவர்கள் நினைப்பதாக தெரிந்தது.

இப்போ பேச்சு திரும்பியது.
மாப்ள...வெள்ளைக்காரிலாம் எப்படி அங்க..?
எப்படின்னா...எப்படி? - நான் கேட்டேன்.
இல்ல..யாரையாவது கிஸ்லாம் பண்ணிருக்கியா? எங்க ஊர் தரத்துக்கு வரும் ஜேம்ஸ்பாண்ட் மற்றும் Sex & Aids ரீதியிலான இதர ஆங்கில மருத்துவ படங்களில் வருபவளை போலத் தான் (பார்த்ததும் ஒரு 2 செகன்ட் பேச்சு ...பின் கிஸ்) எல்லா வெள்ளைக்காரிகளும் என நினைப்பு . கிட்டதட்ட "உயரான் ஒருமிக்கான்" லெவல் படங்கள்..

எனக்கு இதை எப்படி அவர்களுக்கு விளக்க என புரியவில்லை. பின் ரத்னசுருக்கமாக "அதெல்லாம் வெள்ளைக்காரி வெள்ளைக்காரன் கூட மட்டுந்தான் அப்படி இருப்பா" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆர்டர் பண்ணிய சரக்கு(கள்) வந்தது. நயாகரா Choose பண்ணியவன் சொன்னதை போலவே ஏராளமான நொறுக்கு தீவனங்களும் வந்தன. தீவனத்துடன் பழைய நினைவுகளையும் அசைபோட்டோம் (80களில் ஒன்றாக இருந்த பேச்சிலர் லைஃபிலிருந்து முன்னேறி கல்யாண வாழ்க்கை வரை வந்து நின்றது. அதை தனி போஸ்ட்-ல சொல்லி இன்னும் பத்து தலைப்பு ஓட்டுவோம்ல...).

சண்டைபார்ட்டி இருவரில் ஒருவன் ஏதும் தொடவில்லை (குடிப்பதை விட்டாச்சாம்). அவன் கல்யாணத்து முந்தின நாள் வரைக்கும் "குடி சூப்பர் 10"-ல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவன். வாந்தியே எடுத்து வயிறு ஒண்டிபோயி காய்ஞ்சாலும் பரவாயில்லை ..எல்லோரையும் விட ஒரு துளி மட்டா குடித்தாலும் உயிர்நீக்கும் மான இனத்தை சேர்ந்தவன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. விசாரித்ததில் மனைவியின் கடாட்ஷம் (கல்யாணம் ஆகி ஒரு வருடம் இருக்கும்) பின்னனியில் இருந்தது தெரியவந்தது.

இப்ப பீர் பார்ட்டி ..திருந்திய பார்ட்டியை பார்த்து...என்னல இப்படி சொட்டு கூட குடிக்காம ராமசந்திரன இன்ஸல்ட்(?) பண்ற. அவ்ளோ தூரத்துலேர்ந்து நமக்காக (தண்ணியடிக்க?) வந்திருக்கான்.. கொஞ்சமாவது சாப்டு...அவனுக்கு சந்தோஷமா இருக்கும்ல...அதற்கு இவன் "எவம்ல இவன்...சொன்னா புரிஞ்சுக்க...வீட்ல நெலம சரியில்லனா விடேன்...உனக்கு என்ன ரெண்டு ஈனு ஈத்திட்ட (எங்க ஊர் வழக்கப்படி மாடு கன்னுக்குட்டி போட்டால் கன்று ஈனிருக்கு என சொல்வார்கள்...இங்க பீர் பார்ட்டிக்கு ரெண்டு ஆண் பிள்ளைகள்)...உன்னலாம் வீட்ல தண்ணீதொளிச்சு விட்டாச்சு...எங்களுக்கு அப்படியா..இனிமே தான் எல்லாம் இருக்கு..வன்ட்டான் பாரு...எழவுக்கு கம்பெனி சேக்க".

பீர் பார்ட்டி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

நேரம் கடந்தது...அங்கேயே சாப்பாடும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தாகி விட்டது. மணி பதினொன்னரை. சரி வீட்டுக்கு கிளம்பலாம் என ஏகமனதாக முடிவெடுத்து...பில்லை செட்டில் செய்வதற்காக வெய்ட்டரிடம் சைகை செய்தேன். பில்லுடன் வ்ந்தார். டிப்ஸ் எல்லாம் சேர்த்து எழுதி கார்டில் செலுத்திவிட்டு கிளம்பினோம். நண்பன் எவ்ளோ ஆச்சு என (information sake) கேட்டான். பின் இன்னோருநாளும் இப்படி வரவேண்டும் என சொன்னான்.

"எதுக்குல அவனுக்கு (எனக்கு) செலவு வைக்க...அதான் இன்னிக்கி வந்தாச்சுல்லா.." - பீர் பார்ட்டி.

அதற்கு மீண்டும் நேயர்விருப்பம் கேட்ட நண்பர் "அவன் குடுக்கப்போற டாலர்-ல இதுலாம் கொசு மாதிரி..(முதல்ல சம்பளம்..இதர விபரங்கள் சொன்னதின் பலன்) ...இதே மாதிரி 10 தடவ கூட வரலாம்...

யப்பா...இதுக்கு ஒரிஜினல் நயாகராவே போறது cheap என நினைத்து... இடத்தை காலி செய்தேன்(தோம்).

Friday, April 07, 2006

காற்றினிலே வார்த்தைகளால்

வெள்ளி என்றாலே வெள்ளைக்காரர்களுக்கு உற்சாகம் தான், சனி & ஞாயிறு விடுமுறை என்பதால்.

என் ஆபிஸுக்கும் வீட்டுக்கும் 12 நிமிடம்தான் காரில் செல்ல ஆகும் என்பதால் நான் லஞ்சிற்க்கு 99.99% வீட்டுக்குதான் போவேன். Infact நான் பார்க்கிங் பகுதிக்கு நடக்கும் நேரத்தை விட அங்கிருந்து வீட்டுக்கு காரில் செல்லும் நேரம் குறைவு.

இன்று அப்படி போய்க்கொண்டிருந்த போது வழியில் ஒரு கார் இடது இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்யாமல் பின்னால் வருபவர்களை குழப்பும் விதமாக நேராக சென்று கொண்டிருந்த்து. அந்நியன் படம் வேறு ஏற்கனவே ரசித்து பார்த்திருந்ததால் சின்ன அலட்சியம் மெகா அலட்சியமாகி விடக்கூடாதென்பதற்காக, சரி இதை அவளிடம் சொல்லலாம் என் நினைத்து என் காரை கொஞ்சம் விரட்டி இணையான வலது பக்க லேனில் சென்று நம்ம ஊர் பாணியில் கை விரல்களை குவித்து விரித்து காண்பித்து இன்டிகேட் பண்ணினேன். அது புரியாமல் அந்த வெள்ளைக்காரி (ஒரு 25 வயசு இருக்கும்) திருப்பி என்னவென கேட்டாள். "உன் கார் இன்ட்டிகேட்டர் அணைக்கவில்லை" என்பதை (கார் & காற்று சத்தத்தில் பேசினால் கேட்காது) விரலால் அவளை(காரை) சுட்டிக்காட்டி மீண்டும் அதே சமிக்ஞை செய்தேன். வந்தது வினை. அதை அவள் அனர்த்தமாக புரிந்து கொண்டு எனக்கு நடு விரலை காண்பித்தாள். எனக்கா மகா டென்ஷன் ஆகி விட்டது. உடனே என் கட்டைவிரலை (மட்டும்) உயர்த்தி காண்பித்தேன் (டீல்). அவள் முகம் இப்போது சுருங்கி விட்டது. சரியாக என் வீட்டு திருப்பம் (சின்ன ரோடு) வந்தது. நான் திரும்பி என் வீட்டை நோக்கி சென்று காரை நிப்பாட்டி விட்டு இறங்கவும் அவளும் என் பின்னால் வந்து காரை ஆஃப் செய்யாமல் பார்க் மட்டும் பண்ணி என்னிடம் வந்து சற்று கோபத்துடன் கேட்டாள். பொறுமையாக அவளுக்கு விளக்கினேன். பின் புரிந்தவளாய் அவள் செயலுக்கு மன்னிப்பு கேட்டாள். நானும் அதெல்லாம் தப்பாக நினைக்கவில்லை என சொன்னேன். நான் அந்த ஏரியாவில் தான் இருக்கிறேனா என்றும் கேட்டாள். பின் நன்றி சொல்லி விட்டு (இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்து) வண்டியில் கிளம்பி போனாள்.

ஏரியாவை வேறு கேட்டுவிட்டு போயிருக்கிறாள். இனிமேல் தான் தெரியும் வீட்டுக்கு ஆட்டோ வருமா அல்லது லிமோஸின் வருமா என்று....

Wednesday, April 05, 2006

இந்திய விஜயம் - 4

திருநெல்வேலி வந்தாச்சு...பக்கத்து கம்பார்ட்மென்ட்டிலிருந்து சத்தம் கேட்டது. சுமைகள் ஜாஸ்தி என்பதால் எல்லாவற்றையும் compartment வாசல் பக்கம் கொண்டு வைத்தாகி விட்டது.

எனக்கு பொதுவாகவே நண்பர் குழாம் அதிகம். அதிலும் சொந்த ஊரில் என்றால் கேட்கவா வேண்டும். ஒரு "தேவர் மகனுக்கே" (சினிமா) அந்த வ்ரவேற்பு இருக்கும் போது, தேவர், ஐயர், கோனார் போன்ற சகல பிரிவுகளிலும் நண்பர்கள் உள்ள எனக்கு எப்படி வரவேற்பு இருந்திருக்கணும்... என்னத்த சொல்ல. நான் என்று வருகிறேன் என்று பல முறை போனில் பேசிய போது உறுதி செய்து கொண்ட நண்பர்கள் எல்லாரும் அன்று எஸ்கேப் (பொட்டி தூக்க தயாராக இல்லை போலும்).

ட்ராலி அமர்த்தி பொட்டிகளை ஏற்றினேன். மனைவிக்கு பரம சந்தோஷம் (ப்ரென்ட்ஸை பற்றி அவ்ளோ பில்ட் அப் குடுத்திருந்தேன்). என் சகலை (கோ-பிரதர்) ஒரு வேன் அமர்த்தி வந்திருந்தார். ஒருவாராக எல்லாவற்றையும் வேனில் ஏற்றி ஸ்டேஷனிலிருந்து வீடு நோக்கி வேன் விரைந்த்தது.

திருநெல்வேலி ஊரை பொருத்தமட்டில் பெரிதாக மாற்றம் இல்லை. மக்களில் நிறைய மாற்றம். நிறைய காதுகளில் செல். நிறைய பேர் ஏதாவது வேலையில் இருந்தார்கள். ஒரு மூவாயிரமாவது குறைந்தபட்சமாக சம்பாதிக்கிறார்கள். நிறைய பேர் டூ வீலர் வைத்து இருந்தார்கள் (ஸ்கூல் படிக்கும் போது ஒரு சைக்கிளுக்காக நிறைய உண்ணாவிரதம் இருந்து..பின் அப்பாவின் தயவால் கிடைத்தது..... முதுகில்). நிறைய கார்களும் கூட. ட்ராபிக் சென்ஸ் இன்னும் அதே ஒழுங்கில். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கையில் வீடும் வந்தது.

அங்கும் எல்லோரும் குழந்தையை இப்போது தான் முதன் முதலாக பார்ப்பதால் என்னை இரண்டாம் பட்சம் ஆக்கி விட்டார்கள். அளவளாவி விட்டு பின் குளித்து ப்ரஷ் ஆனேன். நண்பர்களுக்கு போன் செய்தேன். "என்ன மக்கா ...பத்திரமா வண்ட்டியா..(வந்துட்டியா). ஸாரில...காலேல அவசரமா போக வேண்டி வந்திருச்சு (எங்க?)...ச்சாயந்திரம் வாரேன்...வீட்லயே இருல....தனியா போய்ராத...இன்னா" (பாருக்கு).

ஒரு ஆறு மணிபோல எல்லாரும் வந்தார்கள். பொதுவாக குசலம் விசாரித்து விட்டு...நேராக சப்ஜெக்டுக்கு வந்தார்கள். எந்த பார் போகலாம். ஒருத்தன் ஆர்யாஸ் என்றான். இன்னொருவன் நயாகரா என்றான். ஆர்யாஸ் மறுக்கப்பட்டவன் ..நயாகரா பரிந்துரைத்தவனிடம் "ஏம்ல...ஆர்யாஸ் வரமாட்டேங்க...மாமனார் பாத்துருவார்னு பயமா" - என்று கேட்க...இவன் " போல...அவர் இருந்தா எனக்கென்ன...புதுசாவா என்னை பாக்க போறாரு". நயாகரா பஸ்டாண்டு பக்கமா இருக்கு...எங்கய்யா வேற (அப்பா) டிக்கட் புக் பண்ண பஸ்டாண்டுக்கு தான் போயிருக்காரு. அதான் பாத்தேன். ஆர்யாஸ் கொஞ்சம் தள்ளி இருக்குல்லா...அதான் சொன்னேன்". சரி பேச்சை வளர்க்க வேண்டாமென்று நான் ..சரி ஆர்யாஸ் நம்ம நெறைய போயிருக்கோம். ஒரு சேன்ச்சுக்கு நயாகரா போலாம்.. நானும் போனதில்லைனு சொன்னேன். "அதுக்கு மட்டும் இல்ல மக்கா...நெறய டிஷ் வேற அன் லிமிடேடா தரான் அதுதான் - நயாகரா சஜெஸ்ட் பண்ணியவர்.

நான் நயாகராவை கனடா நாட்டு பகுதியிலிருந்தும் அமெரிக்க பகுதியிலிருந்தும் நிறைய முறை பார்த்திருக்கேன். திருநெலவேலி ஆங்கிள்-ல இப்பதான் பார்க்கப்போறேன். ஆறுபேர் மூன்று வண்டியில் கிளம்பினோம்.